Wednesday, January 27, 2010

அவர்களும் தொழிலாளர்கள்!

தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதித் திட்ட (இ.எஸ்.ஐ.) மருத்துவமனைகளை மேம்படுத்தவும், புதிய மருத்துவமனை வளாகங்களை உருவாக்கவும் தமிழ்நாட்டுக்கு ரூ. 890 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருப்பது, தமிழகத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளால் பயன்பெறும் தொழிலாளர்கள் அனைவரும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டுமே. இதை மனதில் கொண்டு பார்க்கும்போது, இந்த மருத்துவமனையின் எல்லைக்குள் வரமுடியாத தொழிலாளர்கள் பல கோடிப் பேர் இருப்பதை உணர முடியும்.

அண்மைக்காலமாக அயல்பணி ஒப்புகை என்பது எல்லாத் தொழில்துறைக்கும் பொதுவானதாக மாறி வருகிறது. உதிரி பாகங்களைத் தனியாரிடத்தில் கொடுத்து, செய்து வாங்கி, அதைத் தொழிற்கூடத்துக்குக் கொண்டுவந்து பொருத்துகிற, பயன்படுத்துகிற நிலைமை உருவாகியுள்ளது. மேலும், நிரந்தரப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிக்கும் வழக்கமும் பரவலாக ஏற்பட்டுவிட்டது. இதனால் இ.எஸ்.ஐ. திட்டத்தில் சந்தா செலுத்தி உறுப்பினராக இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவில் இ.எஸ்.ஐ. சந்தாதாரர்கள் எண்ணிக்கை 84 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே.

இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள், மருத்துவர்கள், மருத்துவக் கருவிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆனால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கை குறைந்துவரும் நிலையில், அந்தந்தத் தொழிற்கூடங்களில் பணியாற்றும் தாற்காலிகப் பணியாளர்களுக்கும் இந்த மருத்துவச் சேவை கிடைக்கச் செய்வதில் என்ன சிக்கல் ஏற்படக்கூடும்?

அவ்வாறு செய்வது நல்ல யோசனைதான் என்று ஏற்றுக்கொள்ளும் மத்திய அரசு, நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும் என்று காரணம் சொல்கிறது. அரசு அதிகாரிகள் சொல்லும் விளக்கம் இதுதான்: இ.எஸ்.ஐ. திட்டம் என்பது தொழிலாளர், தொழிற்கூடம் இரண்டும் உறுப்பினர்களாகச் சேர்ந்து நிதிசெலுத்தும் திட்டம். இதில் தொழிலாளர் தனது சம்பளத்தில் 1.75 சதவீதத்தையும் தொழிற்கூடம் தனது பங்காக 4.75 சதவீதத்தையும் செலுத்துகின்றனர். இத்திட்டத்தில் சிகிச்சை மட்டுமன்றி, மருத்துவமனைக்கு வந்ததால் பணிக்குச் செல்ல முடியாமல் ஏற்படும் சம்பள இழப்பு, பணிக்கால விபத்தில் தாற்காலிக ஊனம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என பல்வேறு சலுகைகள் உள்ளன. இதையெல்லாம் தாற்காலிகப் பணியாளர்களுக்குத் தரஇயலாது என்பதுதான் அரசுத் துறையின் விளக்கம்.

தாற்காலிகத் தொழிலாளர்கள் இத்தகைய இழப்பீடுகள் பெறத் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால், காய்ச்சலுக்கும், சாதாரண காயங்களுக்கும் மருத்துவ ஆலோசனை பெறவும், அதற்கான மாத்திரைகளைப் பெறவும் செய்தால், அதனால் என்ன செலவு ஆகிவிடப்போகிறது? தாற்காலிகத் தொழிலாளர் இ.எஸ்.ஐ. சந்தாதாரர் இல்லையென்ற போதிலும்கூட, அவர் சார்ந்துள்ள நிறுவனம் சந்தாதாரர் என்பதால் இந்தச் சிறிய மருத்துவச் சேவையை அவர்களுக்கும் ஏன் நீட்டிக்கக்கூடாது?

மேலும், 50 ரூபாய்க்குக் குறைவாகத் தினக்கூலி பெறும் நபரிடம் சந்தா வசூலிக்காமல், அந்தத் தொழில்நிறுவனத்தின் பங்கை மட்டுமே சந்தாவாகப் பெற்று அந்தத் தொழிலாளியைச் சந்தாதாரராகக் கருதி சிகிச்சை அளிக்க வழிவகை செய்யும் சட்டம், தாற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பதிலி தொழிலாளர்கள் விஷயத்திலும் சலுகைகளை நீட்டிக்க சில சட்டத் திருத்தங்களைச் செய்தால் என்ன? இவர்களைப்போன்றே, மத்திய, மாநில அரசுகளின் அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெற்றுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இந்த மருத்துவமனைகளில் சிறு நோய்களுக்காக மருத்துவ ஆலோசனையும் மாத்திரைகளும் பெறச் செய்தாலும் பலர் நன்மை அடைவார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் இத்தகைய ஊழியர்கள் குறைந்த சம்பளம் பெற்று வருவதுடன், உடல்நலம் பாதிக்கப்படும்போது அரசு மருத்துவமனைகளையோ அல்லது தனியார் மருத்துவமனைகளையோ நாட வேண்டியிருக்கிறது. குறிப்பாக, காய்ச்சல், கண் பரிசோதனை போன்ற எளிய மருத்துவ ஆலோசனைகளுக்கும்கூட இத்தொழிலாளர்கள், நிறுவனத்தின் பணிநேரம் (ஷிப்ட்) காரணமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுவதோடு, தங்கள் சக்திக்கு மீறி செலவு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை நிலை.

இத்தொழிலாளர்களுக்கு பெரிய அறுவைச் சிகிச்சை அவசியமெனில் இவர்களில் 90 சதவீதம் பேர் தமிழக அரசின் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் பயன் பெற முடியும் என்றாலும், சிறுசிறு உடல்கோளாறுகளுக்கு மருத்துவச் செலவுகளை தாமே ஏற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

முன்பெல்லாம் பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனத் தொழிலாளர் நலனில் அக்கறை செலுத்தி, அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளை ஏற்படுத்தி நிர்வகித்தன. காலப்போக்கில், ஏதாவது ஒரு மருத்துவமனையில் தொழிலாளர்களுக்கு சிகிச்சை பெறவும் அதற்கான தொகையை நிறுவனம் செலுத்துவதுமான ஏற்பாடு உண்டானது. அதன்பின்னர் எல்லாமும் மறக்கப்பட்டுவிட்டது. கோடிகோடியாக லாபம் சம்பாதிக்கும் தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள்கூட, தங்கள் தொழிலாளர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவதில்லை.

இந்நிலையில், அரசுதான் இவர்களுக்கு உதவ வேண்டும். இ.எஸ்.ஐ. நிர்வாகக் குழுவில் தொழிலாளர், தொழிற்கூடம், மத்திய, மாநில அரசுகள், மருத்துவத்துறை பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இத்தகைய நடைமுறையைத் தமிழகம் ஒரு முன்னோடியாக அமல்படுத்தலாம். தேவைப்பட்டால், இந்தத் தொழிலாளர் சார்பில், தொழிற்கூடங்களுக்குப் பதிலாக தமிழக அரசே ஒரு தோராயமான தொகையை இ.எஸ்.ஐ.-க்கு செலுத்துவதன் மூலம் ஆட்சேபணைகளையும் இல்லாமல் செய்துவிட முடியும். நிரந்தரப் பணியாளர்கள் குறைவதால், இ.எஸ்.ஐ. சந்தாதாரர் எண்ணிக்கையும் குறைந்துவரும் நிலையில், இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்கட்டமைப்புகளை ஏன் மற்ற தொழிலாளர்களுக்காகத் திறந்துவிடக்கூடாது!
நன்றி : தினமணி

No comments: